251. அருள்மிகு மருந்தீஸ்வரர் கோயில்
இறைவன் மருந்தீஸ்வரர்
இறைவி திரிபுரசுந்தரி, சொக்கநாயகி
தீர்த்தம் பஞ்ச தீர்த்தம்
தல விருட்சம் வன்னி மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருவான்மியூர், தமிழ்நாடு
வழிகாட்டி சென்னையில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது. திருவான்மியூர் பேருந்து நிலையத்தின் அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு நுழைவாயிலும், இராஜகோபுர நுழைவாயில் கிழக்கு திசையிலும் உள்ளது.
தலச்சிறப்பு

Thiruvanmiyur Gopuramவால்மீகி முனிவர் தவம் செய்து சிவபெருமானின் தரிசனம் பெற்ற தலமாதலால் இத்தலம் 'திருவான்மியூர்' என்ற பெயர் பெற்றது. வான்மீகம் என்றால் புற்று என்று பொருள். வால்மீகி முனிவர் தவம் செய்து புற்றிலிருந்து எழுந்ததால் அப்பெயர் பெற்றார். கோயிலின் மேற்கு கோபுரத்திற்கு சற்றுத் தூரத்தில் வால்மீகி முனிவருக்கு ஒரு கோயில் உள்ளது.

உயிரினங்களுக்கு ஏற்படும் 4448 வகை நோய்களின் தன்மைகள், அவற்றைப் போக்கும் மூலிகைகளின் வகைகள் மற்றும் அவற்றை உபயோகிக்கும் முறைகளைப் பற்றி அகத்திய முனிவருக்கு இறைவன் உபதேசித்ததால் இத்தலத்து இறைவனுக்கு 'மருந்தீசர்' என்ற பெயர் ஏற்பட்டது.

Thiruvanmiyur Moolavarமூலவர் 'மருந்தீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன் சற்று சாய்ந்த லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'திரிபுரசுந்தரி', 'சொக்க நாயகி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

ஒரு சமயம் அப்பைய தீட்சிதர் இத்தலத்திற்கு வந்தபோது கடும் மழை காரணமாக கோயிலின் முன்புறம் சென்று சுவாமியைக் காண முடியவில்லை. அதனால் வருந்திய அவர், சிவபெருமானிடம் வேண்ட, சுவாமியும் மேற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தார். அதனால் இக்கோயிலில் மட்டும் சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும், விநாயகரும், சுப்பிரமண்யரும் கிழக்கு நோக்கியும் தரிசனம் தருகின்றனர்.

கோஷ்டத்தில் செல்வ விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

Thiruvanmiyur Utsavarஉள்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், உற்சவ மூர்த்திகள், வீரபாகுவுடன் சுப்ரமண்யர், அருணகிரிநாதர், பிட்சாடனர், அறுபத்து மூவர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் மற்றும் 108 சிவலிங்கம், கேதாரலிங்கம், இராமலிங்கம், காசி விஸ்வநாதர், உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார், ஜம்புலிங்கேஸ்வரர், பிரதோச நாயனார், 63 நாயன்மார்கள், பைரவர், நால்வர், கஜலட்சுமி, நாகதேவதைகள் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

வெளிப்பிரகாரத்தில் கோபுர வாசலுக்கு அருகில் விநாயகர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யர் சன்னதிகள் உள்ளன. மற்றொரு விநாயகர் சன்னதியில் மூன்று விநாயகர்கள் உள்ளனர். அடுத்து தல விருட்சமான வன்னி மரத்தடி உள்ளது. இங்குதான் அகத்தியருக்கு சிவபெருமான் திருமணக் கோலம் காட்டியருளினார். இன்றளவும் பங்குனி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் திருவிழாவில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அசுரர்களுடன் நடந்த போரில் தேவர்களுக்கு, முசுகுந்த சக்கரவர்த்தி உதவி செய்ததால் இந்திரனிடம் இருந்து பத்து தியாகராஜர் திருவுருவங்களைப் பெற்றார். அவற்றில் ஏழு திருவுருவங்களைத் திருவாரூரைச் சுற்றியுள்ள ஏழு இடங்களில் நிறுவினார். அவை 'சப்த விடங்கத் தலங்கள்' என்று அழைக்கப்படுகிறது. மற்ற மூன்று திருவுருவங்களை தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர், திருவான்மியூர், திருக்கச்சூர் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்தார். இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தியாகராஜரை 'ஆடும் தியாகர்' என்று அழைப்பர். இவர்தான் வன்னி மரத்தடியில் வான்மீக முனிவருக்கு நடனக் காட்சி தந்தருளியவர். இன்றும் விசேஷ நாட்களிலும், திருவிழாவின் முக்கிய நாளிலும் தியாகராஜப் பெருமானின் பதினெட்டு நடனக் காட்சி நிகழ்கிறது.

Thiruvanmiyur Valmigi Thiruvanmiyur Pamban Swamigalபிரம்மா, தேவேந்திரன், சூரியன், சந்திரர்கள், யமன், வேதங்கள், உமாபதி சிவம், இராமலிங்க அடிகாளார், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் வழிபட்ட தலம்.

இக்கோயிலுக்கு அருகில் சுமார் 2 கி.மீ. தொலைவில் பாம்பன் சுவாமிகள் சமாதிக் கோயில் உள்ளது. கிழக்கு மாட வீதி வழியாக நடந்து சென்றால் அரை கி.மீ. தொலைவில் உள்ளது.

இக்கோயிலில் உள்ள தேவாசிரியன் திருமுறை மண்டபத்தில் ஆண்டு முழுவதும் சைவ சமய சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com